தமிழகம்

பெண்கள் பொருளாதார வளர்ச்சிக்கு  திமுக அரசு உறுதுணையாக இருக்கும்: அமைச்சர் பி. மூர்த்தி  

என்.சன்னாசி

பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு திமுக அரசு உறுதுணையாக இருக்கும் என, மதுரையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பி. மூர்த்தி பேசினார்.

மதுரையில் சமூக நலத்துறையின் கீழ் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கத்தை மதுரை கிழக்கு, மேற்கு செல்லம்பட்டி, உசிலம்பட்டி, சேடபட்டி, மேலூர் கொட்டாம்பட்டி அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி மற்றும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த 548 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் ஆக மொத்தம் ரூ.1,99,77,888 மதிப்புள்ள 4 கிலோ மற்றும் 384 கிராம் தங்கம் மற்றும் 91 பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி பாண்டிக்கோயில் அருகே திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

அமைச்சர்கள் பி. மூர்த்தி, பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:

திமுக ஆட்சியில் தான் 1989ல் முதன்முதலில் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டு, பெண்கள் முன்னேற்றம், சொத்து உரிமை, வேலை வாய்ப்பில் 30 சதவீதம், உள்ளாட்சியில் 33 சதவீதம், திருமணம் உதவி, முதியோர் உதவி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, மேலும் சுயஉதவிக்குழு மகளிருக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.

தற்போது, எல்லா வகையிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். பெண் ஒருவர் வேலைக்குச் சென்றால் அந்த குடும்பம் முன்னேறும் என்ற நிலை உள்ளது. பெரும்பாலான குடும்பங்களில் குடும்பத் தலைவரைவிட, தலைவியே முடிவெடுக்கும் சூழல் உள்ளது.

பெண்கள் படிப்பு, வேலை வாய்ப்புகளில் உயரவேண்டும். மதுரையில் கரோனா 2வது அலை குறைய மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் ஒத்துழைப்பு அதிகளவில் கைகொடுத்தது. பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு திமுக அரசும், முதல்வரும் உறுதுணையாக இருப்பார்.

ஏற்கனவே கடந்த அரசு வைத்துவிட்டுச் சென்ற கடன்களை சமாளித்து, மக்களுக்கான நலத்திட்டங்களை செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் அனீஷ்சேகர், வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், பூமிநாதன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT