திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப்பணிகளை தீவிரப்படுத்தவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும், விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க கரோனா தடுப்புப்பணி தொடர்பு அலுவலர்களுக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நேரத்தில் அரசின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருந்தாலும் அரசு கூறிய அறிவுரைகளை பின்பற்றாத பொதுமக்களால் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உருவாகும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதைதொடர்ந்து, கரோனா தடுப்புப் பணி தொடர்பு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அவசர ஆலோசனை நடத்தினார்.
இதில், பல்வேறு உத்தரவுகளை ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறும்போது, ‘‘தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்ததால், பொதுமக்கள் பாதுகாப்புடன் தங்களது அன்றாடப்பணிகளை மேற்கொள்ள அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீடித்துள்ளது.
கரோனா முழுமையாக நம்மை விட்டு விலகவில்லை என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும்பாலானப்பகுதிகளில் மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் கூடி வருகின்றனர். குறிப்பாக நகர் பகுதியில் காய்கறி மார்க்கெட், இறைச்சிக்கூடம், வாரச்சந்தை, மளிகைக்கடைகள், உழவர்சந்தை, அனைத்து மத வழிபாட்டு தலங்களில் அதிக அளவில் கூடி வருகின்றனர். அதிலும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் நிறைய பேர் சுற்றி வருவதை காண முடிகிறது.
இருசக்கர வாகனம், கார்களில் செல்வோர் சிலர் முகக்கவசம் அணியாமல் சுற்றி வருகின்றனர். ஆட்டோக்கள், பேருந்துகளில் அதிக கூட்டத்தை காண முடிகிறது. தேநீர் கடைகள், உணவகங்களில் கூடுமானவரை பார்ச்சல் சேவையை தொடர அரசு அறிவுறுத்தியிருந்தாலும், உணவகங்களில் சர்வசாதாரணமாக உட்கார்ந்து சாப்பிடும் நிலை மீண்டும் தலைதூக்கத்தொடங்கியுள்ளது.
பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகளின் இது போன்ற அலட்சிய போக்காமல் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கரோனா 2-வது அலையால் நாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது. மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் அவதிப்பட்டதையும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்த நிகழ்வுகளை அவ்வளவு சீக்கரத்தில் யாரும் மறந்துவிடக்கூடாது. பொதுமக்கள் அனைத்து இடங்களிலும் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தேவை என்றால் மட்டுமே வெளியே வர வேண்டும். அவசியம் இல்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள் இல்லாததால் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றி வருவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர் அவர்களை கட்டுப்படுத்த வேண்டும்.
அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப்பணி தொடர்பு அலுவலர்கள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் திடீர் சோதனை நடத்த வேண்டும்.
அந்தந்த வட்டத்துக்கு உட்பட்ட வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர்கள், காவல் துறையினர் சுழற்சி முறையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறுவோர்களை கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு ரூ.500, வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கலாம். கரோனா தடுப்புப்பணிகளை சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பிடிஓக்கள் கண்காணித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கையாக வழங்க வேண்டும்’’. இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி தலைமையில் வட்டாட்சியர்கள் அனந்தகிருஷ்ணன் (ஆம்பூர்), மோகன்(வாணியம்பாடி) மற்றும் காவல் துறையினர் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் கரோனா தடுப்புப்பணியில் இன்று ஈடுபட்டனர்.
இதில், ஆம்பூர் பஜார், நேதாஜி ரோடு, உமர் ரோடு, புறவழிச்சாலையில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.5,700 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.