மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தி புதுச்சேரி நலன் காப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் உறுதியாக தெரிவித்தார்.
புதுச்சேரி லாஸ்பேட் சட்டப்பேரவைத் தொகுதி செயற்குழுகூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சாமிநாதன் இன்று பங்கேற்றார். இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"புதுச்சேரி மக்கள் நலன் பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் புதுச்சேரி பாஜக எதிர்க்கும், தமிழகத்துக்கு தண்ணீர் குறைந்தால் காரைக்காலுக்கு நீர் வரத்து குறையும்.
குறிப்பாக மேகதாது அணையால் தண்ணீர் வரத்து குறையும். புதுச்சேரி மாநில நலனை பாதிக்கும் எவ்விசயத்தையும் பாஜக எதிர்க்கும். மேகதாதுவில் அணை கட்டினால் புதுச்சேரி விவசாயிக்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மத்திய அரசுக்கு எடுத்துக்கூறுவோம்.
தேசிய தலைமையிடமும் எடுத்துக்கூறுவோம். பாஜக கூட்டணி அரசு இங்குள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுத்தால் பாஜக ஆதரிக்கும்.
அத்துடன் இங்குள்ள குழுவை நேரடியாக மத்திய அரசை சந்திக்க ஏற்பாடு செய்வோம். இது தொடர்பாக புதுச்சேரி அரசு எடுக்கும் அனைத்தும் நடவடிக்கைக்கும் பாஜக துணை நிற்கும்.அணை கட்டுவதற்கு தடை விதிக்ககோரி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் " என்று குறிப்பிட்டார்.
முன்னதாக இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
லாஸ்பேட்டை தொகுதி முழுவதும் ஆகஸ்ட் 15 தேதிக்குள் 100% கரோனா தடுப்பு ஊசி செலுத்திட புதுச்சேரி அரசுடன் இணைந்து பாஜக நிர்வாகிகள் செயல்படுவோம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் பாஜக வெற்றி பெற மக்கள் பணி ஆற்ற வேண்டும். பாரதப் பிரதமர் அறிவித்த மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.