நல்லாம்பட்டியில் கிராம மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் விதமாக ராஜா குளத்தில் மீன்பிடித் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் கிராம மக்கள் கலந்துகொண்டு குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
திண்டுக்கல் அருகேயுள்ள நல்லாம்பட்டி கிராமத்தில் உள்ள முனியப்பன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக மீன்பிடித்திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இருபது ஆண்டுகளாக நல்லாம்பட்டியில் உள்ள ராஜா குளத்திற்கு நீர்வரத்து இல்லாததால் மீன்பிடித்திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ராஜா குளத்திற்கு தண்ணீர் வரத்துவங்கியதால் மீன்குஞ்சுகளை குளத்தில் விட்டனர்.
இதனால் இந்த ஆண்டு முனியப்பன்கோயில் திருவிழாவின் ஒருபகுதியாக கிராமக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் விதமாக மீன்பிடித்திருவிழா இன்று 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.
இதில் நல்லாம்பட்டி, வாழைக்காபட்டி, கண்ணாபட்டி, வேடபட்டி என 18 பட்டி கிராமமக்கள் கலந்துகொண்டனர். அனைவரும் ஒரே நேரத்தில் இன்று காலை குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். கட்லா, ஜிலேபி, ரோகு என பல்வேறு வகையான மீன்கள் பிடிபட்டன. மீனை பிடிக்கமுடியாதவர்களுக்கு அதிக மீன்களை பிடித்தவர்கள் கொடுத்து பகிர்ந்துகொண்டனர்.
நேற்று மதியம் மீன்களை சமைத்து திருவிழாவிற்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்துபடைத்தனர். நல்லாம்பட்டி உள்ள 18 பட்டி கிராமத்திலுள்ள வீடுகளில் இன்று மீன் குழம்பு என்பதால் ஊரே மீன்குழம்பு வாசனையில் மணத்தது.