ஆடிப்பட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி, சிறுதானிய பயிர்கள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடிக்கான விதையின் தரத்தை உறுதி செய்யும் வகையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை அலுவலர்கள் மூலம் விதை ஆய்வுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவையில் உள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் எம்.சுப்பையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் மண் மற்றும் பாசன நீர் பரிசோதனைகள் செய்து பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பருவத்திற்கேற்ற பயிர், ரகங்களை தேர்வுசெய்து சாகுபடி செய்வது அவசியம். விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் இருந்து மட்டுமே வாங்க வேண்டும். எங்குவிதை உற்பத்தி செய்யப்பட்டது, காலாவதி நாள் ஆகியவை விவரங்களை சரிபார்த்து விதையை கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும், விதை கொள்முதல் செய்ததற்கான ரசீதை, அறுவடை காலம்வரை விவசாயிகள் வைத்திருக்க வேண்டும். விவசாயிகள் நேரடி விதைப்பு செய்யும்பட்சத்தில் நன்கு உழவு செய்து மண்ணில், போதியஅளவு ஈரப்பதம் இருக்கும்போது விதைகளை விதைப்பு செய்வது நல்லது. மேலும், விதைப்பதற்குமுன் தங்களது வீட்டிலேயே விதையின் முளைப்புத்திறனை பரிசோதித்து பயன்படுத்துவது சிறந்தது. நடவு வயலில் களைச் செடிகள் மற்றும் கலவன்களை கட்டுப்படுத்த, முன்போக அறுவடையின்போது சிதறிய விதைகள் மற்றும் களைவிதைகள் ஆகியவை முளைத்தபின் மீண்டும் ஒருமுறை உழவு செய்தபின் நடவு செய்வது சிறந்தது.
விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களை அணுகி பருவத்துக்கு ஏற்ற பயிர் ரகங்களை தேர்வு செய்து, உரிய தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற்று கூடுதல் மகசூல் பெறலாம். மேலும், விவசாயிகள் தங்களின் விதை தொடர்பான பிரச்சனைகளுக்கு தங்கள் பகுதியில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.