சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று பல்கலைக்கழக நாள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. துணைவேந்தர் சுதா சேஷய்யன் வரவேற்றார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும், பல்கலை. இணைவேந்தருமான மா.சுப்பிரமணியன் விழாவைத் தொடங்கிவைத்து, அதிக மதிப்பெண் பெற்ற 125 மாணவ, மாணவிகளுக்கு 185 பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். விழாவில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு பணி அலுவலர் ப.செந்தில்குமார், பல்கலை. பதிவாளர் ம.பா.அஸ்வத் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: உலகம்முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 700 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா அச்சத்தில் உள்ளனர். மக்களின் அச்சத்தைப் போக்கி, வாழ்க்கைக்கான அர்த்தத்தை தந்தவர்கள் மருத்துவர்கள்தான்.
எனவேதான், மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது. உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது.
ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.
சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகஅளவில் கரோனாவால் இறந்துள்ளனர். எனவே `மக்களைத் தேடிமருத்துவம்' திட்டம் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் தொற்றா நோய்களால் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்த திட்டத்தின் மூலம் இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடியும்.
செவிலியர் உதவியாளர் படிப்புமுடித்தவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்த பிறகு, போராட்டத்தை கைவிட்டனர்.
சுகாதாரத் துறை மக்களின் நலன் காக்கும் துறையாக மட்டுமின்றி, மருத்துவம் சார்ந்த கல்வி கற்ற அனைவரின் நலன் காக்கும் துறையாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.