ஆடி மாதப்பிறப்பையொட்டி, சேலத்தில் நேற்று தேங்காய் சுடும் நிகழ்வு நடந்தது. மன்னார்பாளையம் தோப்புக்காடு பகுதியில் உறவினர்களுடன் புதுமண தம்பதி தேங்காயை சுட்டனர். படம்: எஸ்.குரு பிரசாத் 
தமிழகம்

ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு தேங்காயை தீயில் சுட்டு பொதுமக்கள் வழிபாடு

செய்திப்பிரிவு

ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு, சேலத்தில் பொதுமக்கள் தேங்காயை தீயில் சுட்டு வழிபடுவது வழக்கம். இதிகாசக் கதைகளை மேற்கோள் காட்டி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதற்காக தேங்காயை தரையில் தேய்த்து, அதன் மீதுள்ள நாரை அகற்றிவிட்டு, தேங்காயின் ஒரு கண்ணை துளையிட்டு, அதில் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், பொட்டுக்கடலை, ஏலக்காய் உள்ளிட்ட கலவையை தேங்காய்க்குள் நிரப்பி பின்னர், அழிஞ்சான் குச்சியால் தேங்காய் துளையிடப்பட்ட பகுதியில் சொருகி, தீயில் தேங்காயை காட்டி பொதுமக்கள் தேங்காய் சுடும் நிகழ்ச்சியை கொண்டாடினர்.

சுடப்பட்ட தேங்காயை குச்சியுடன் விநாயகர் கோயிலுக்கு எடுத்துச் சென்று, அங்கு சுவாமி முன்பு வைத்து வழிபட்டனர். பின்னர் சுடப்பட்ட தேங்காயில் உள்ள பூரணத்தை நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி, ஆடி மாதப்பிறப்பை வரவேற்று விமர்சையாக கொண்டாடினர்.

கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதேபோல, செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், காளியம்மன் கோயில், சஞ்சீவிராயன் மாரியம்மன் கோயில், பலப்பட்டறை மாரியம்மன் கோயில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.

மேட்டூர் மற்றும் காவிரி கரையோரங்களில் பொதுமக்கள் திரளாக வந்து நீராடவும், கூடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், மேட்டூர் அணை பூங்கா, மேட்டூர் காவிரி கரையோரங்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

SCROLL FOR NEXT