தமிழகம்

பாஜக அரசியல் அணுகுமுறை தமிழகத்தில் எடுபடாது: தருமபுரி எம்.பி செந்தில்குமார் கருத்து

செய்திப்பிரிவு

பாஜக-வினரின் அரசியல் அணுகுமுறை தமிழகத்தில் எடுபடாது, ஆட்சியையும் பிடிக்க முடியாது என்று தருமபுரி எம்பி தெரிவித்தார்.

தருமபுரி அடுத்த அதியமான்கோட்டையில் நேற்று நடந்த அரசு விழாவில் தருமபுரி எம்பி செந்தில்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தருமபுரி-மொரப்பூர் இணைப்பு ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த திட்டத்துக்கான கணக்கில் ரூ.1000 மட்டுமே இருந்தது. எனவே, திட்டத்தை செயல்படுத்த துறையின் அமைச்சர், அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து நிதி ஒதுக்க வலியுறுத்தி வருகிறேன். இந்த திட்டத்தில் 8 கிலோ மீட்டர் தூரம் தருமபுரி நகர்ப் பகுதியாக இருக்கிறது. கட்டிடங்களும், வீடுகளும் இருப்பதால் மாற்றுப் பாதையில் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக குழு அமைத்து நில ஆய்வு செய்ய ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது. வரும் வாரத்தில் இதற்கான ஆய்வுப் பணி தொடங்கும். மொரப்பூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே ரயில் பாதை அமைக்க அளவீட்டு பணிகள் நடந்துள்ளன. அடுத்தடுத்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் துறை அலுவலர்களை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்துவேன். விரைவில் தருமபுரி-மொரப்பூர் இணைப்பு ரயில்பாதை திட்டம் தொடங்கப்படும்.

பாஜக-வினர் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்ற நிலை வரும்போதெல்லாம் ஏதாவது பிரிவினை வாதத்தை கையில் எடுத்து சிறு, சிறு இலக்கை வைத்து செயல்பட முயற்சிக்கிறார்கள். அந்த வகையைச் சேர்ந்தது தான் கொங்குநாடு விவகாரம். பாஜக-வினரின் அரசியல் அணுகுமுறை தமிழகத்தில் எடுபடாது, அவர்களால் ஆட்சியையும் பிடிக்க முடியாது.

இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT