மாமல்லபுரத்தில் ஒரு நாளைக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட 3-வது கடல்நீரை குடிநீராக்கும் உற்பத்தி நிலையம் தொடங்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,259 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஜெர்மன் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த நாடு ரூ.700 கோடி வழங்கியது. இந்தப் பகுதியில் உற்பத்தியாக உள்ள குடிநீர் சென்னை, பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில்பொதுமக்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
ஏற்கெனவே 2009-ம் ஆண்டு துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது ரூ.100 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்த பணிகளை ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
3-வது கடல்நீரை குடிநீராக்கும் உற்பத்தி நிலையம் தொடங்குவது குறித்து ஆய்வு செய்தேன். ஒரு நாளைக்கு 400 மில்லியன் லிட்டர் தண்ணீர் உற்பத்தி திறன்கொண்டதாக இந்த ஆலை அமையும். கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை ஆய்வுசெய்தேன். பணிகளை விரைந்துமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றுஅறிவுறுத்தியுள்ளேன் என்றார்.