சென்னை காவல்துறையில் சைபர் குற்றப்பிரிவு உள்ளிட்ட மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விவரங்கள் காவல்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர், உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார்.
சென்னை காவல் துறையில், சைபர் குற்றப்பிரிவு உள்ளிட்ட மத்திய குற்றப் பிரிவுகளில் பதிவு செய்யப்படும் வழக்குகள் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில், சைபர் குற்றப் பிரிவு, மத்திய குற்றப் பிரிவுகளை, தமிழக காவல்துறை இணையதளத்தில் இணைக்கக் கோரி, பாலாஜி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழக காவல்துறை இணையதளத்தில் சைபர் குற்றப் பிரிவு, மத்திய குற்றப் பிரிவுகள் இணைக்கப்பட்டு, வழக்குகள் குறித்த முதல் தகவல் அறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.