தமிழகம்

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சொட்டுநீரில் கொய்யா சாகுபடி செய்து லாபமீட்டும் பட்டதாரி இளைஞர்

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.புதுப்பட்டியில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சொட்டுநீரில் கொய்யா சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகிறார் பட்டதாரி இளைஞர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பலகாரன்பட்டி புதுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் மகன் பிரபு (36). பட்டதாரி இளைஞரான இவர் தந்தையோடு இணைந்து விவசாயம் செய்து வருகிறார். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நெல், கரும்பு பயிர் சாகுடி செய்வதை கைவிட்டு, இவர் சொட்டுநீரில் கொய்யா சாகுபடி செய்து ஆண்டுக்கு பல லட்சங்கள் லாபம் ஈட்டி வருகிறார்.

இதுகுறித்து பிரபு கூறியதாவது: தந்தையின் வழியில் வழக்கம்போல் நெல், கரும்பு விவசாயம் செய்து வந்தோம். மேலூர் கடைமடைப்பகுதியில் உள்ளதால் பெரியாறு கால்வாய் தண்ணீர் கிடைக்காது. நிலத்தடி நீரும் குறைந்து வருதால் நெல், கரும்பு சாகுபடியை தவிர்த்தோம்.

சொட்டுநீர்ப்பாசனத்தில் கொய்யா சாகுபடி செய்ய முடிவெடுத்து மேலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் நிர்மலாவிடம் ஆலோசனை பெற்றோம். தோட்டக்கலைத்துறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் மானிய விலையில் சொட்டுநீர்ப்பாசனம் அமைத்துக் கொடுத்தனர்.

அதன்படி ஒன்றரை ஏக்கரில் தைவான் பிங்க் ரக கொய்யா சாகுபடி செய்துள்ளோம். 10 அடிக்கு 10அடி இடைவெளியில் ஒன்றரை ஏக்கரில் 650 கன்றுகள் வீதம் நடவு செய்துள்ளோம். ஒன்றரை வருடத்தில் பலன் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. தற்போது ஒரு செடிக்கு குறைந்தது 10 கிலோ முதல் 15 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ. 3 லட்சம் வரை லாபம் கிடைக்கும். நேரடியாக வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

நாங்களும் மாட்டுத்தாவணி சந்தையில் சென்று விற்பனை செய்து வருகிறோம். இதனால் மற்ற பயிர்களை காட்டிலும் கொய்யாவில் நல்ல லாபம் கிடைக்கிறது. மே, ஜூன் மற்றும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை கவாத்து செய்தால் ஆண்டு முழுவதும் சீரான முறையில் மகசூல் கிடைக்கும். குறைந்த தண்ணீர் செலவில் அதிக லாபம் கிடைக்கிறது, என்றார்.

SCROLL FOR NEXT