கோவை - மன்னார்காடு வனக்கோட்டங்களுக்கு இடையே யானைகள் இடம்பெயர்வுக்காக பயன்படுத்தும் 18 வழித்தடங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை வனக்கோட்டத்தில் யானைகளின் இடம்பெயர்வு பாதைகளில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, யானைகளின் வாழ்விடத்தைப் புரிந்துகொள்வது, யானை - மனித மோதல் இடம்பெயர்வு பாதைகளுடன் எவ்வாறு சம்பந்தப்படுகிறது என்பன உள்ளிட்டவற்றை அறிய கடந்த 6 மாதங்களாக வனத்துறை சார்பில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக தமிழக - கேரள மாநிலங்களை உள்ளடக்கிய கோவை - நிலம்பூர் யானை காப்பக பகுதிகளில், இடம்பெயர்வு பாதைகளை யானை ஆய்வாளரான என்.சிவகணேசன் கண்டறிந்துள்ளார்.
இது தொடர்பாக கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் கூறுகையில், "கேரள மாநிலம் நிலம்பூர் யானைகள் காப்பக பகுதியிலிருந்து பெரும்பாலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் யானைகள் இடம்பெயர்வதால் கோவை வனக்கோட்டத்துக்குட்பட்ட மதுக்கரை, கோவை, போலுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை ஆகிய வனச்சரகங்களை ஒட்டிய பகுதிகளில், மனித - யானை மோதல்கள் நிகழ்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரள - தமிழக வனப்பகுதியை உள்ளடக்கிய நிலம்பூர் - கோவை யானை காப்பக வனப்பகுதிகளில் யானைகள் பயன்படுத்தும் 18 இடம்பெயர்வு பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், யானைகள் சரிவுடைய மலைப்பாங்கான பகுதிகளைத் தவிர்க்க முனைவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இடம்பெயர்வு பாதைகளில் பெரும்பாலானவை நெடுஞ்சாலைகளுக்கு குறுக்கே சென்றாலும், பருவ காலங்களில் யானைகள் அதன் இலக்கை நோக்கி இடம்பெயர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. வற்றாத நீர் ஆதாரங்கள் மற்றும் வனப்பகுதிகளில் மாறுபடாமல் அப்படியே இருக்கும் இடம்பெயர்வு பாதைகள்தான் யானைகளின் தேர்வாக உள்ளன.
வனப்பகுதியில் ஆங்காங்கே தானியங்கி கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், வனத்துறை களப்பணியாளர்கள் அளிக்கும் தகவல்களைக்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, இதேபோல் பாலக்காடு - கோவை வனக்கோட்டங்களுக்கு இடையேயும் ஆய்வு மேற்கொள்ளப்படும். தற்போது கிடைத்த ஆய்வு முடிவுகளை ஆவணப்படுத்துவதுடன், அதன் விவரம் மன்னார்காடு வனக்கோட்டத்துக்கும் பகிரப்படும்" என தெரிவித்தார்.