பல்லவர் காலக் கட்டிடக் கலைக்கு ஆதாரமாகத் திருப்பட்டூரில் உள்ள கைலாசநாத சுவாமி கோயில் சிற்பங்கள் மற்றும் கட்டுமானங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த நாராயணமூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பட்டூரில் கைலாசநாத சுவாமி கோயில் உள்ளது. பல்லவர் காலக் கட்டிடக் கலைக்கு ஆதாரமான இக்கோயில், இரண்டாம் நந்தி வர்மன் காலத்தைச் சேர்ந்தது. கோயில் மண்டபம் புகை படிந்து காணப்படுகிறது.
இந்த மண்டபத்தில் ஏராளமான தூண்கள் சிதைந்துள்ளன. எண்ணெய் படிந்து, கை வைத்தாலே வழுக்கி விடுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. முறையான பராமரிப்புப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. இந்தக் கோயிலைப் புனரமைத்து முறையாகப் பராமரித்தால் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றலாம். எனவே, கோயிலை உடனடியாகப் புனரமைக்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.
அரசு வழக்கறிஞர் தரப்பில், ''புனரமைப்புப் பணிகள் தொடர்பாகத் தொல்லியல் துறையின் உயர்மட்டக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை தொல்லியல் துறையின் பரிசீலனையில் உள்ளது'' எனக் கூறப்பட்டது.
மனுதாரர் தரப்பில், ''இங்குள்ள சிற்பங்கள் மற்றும் கட்டுமானங்கள் மணலை அடிப்படையாகக் கொண்டவை. மழைக்காலம் தொடங்கினால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், கோயில் சிற்பங்கள், கட்டுமானங்கள் மழையால் பாதிக்காமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்து அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு அடுத்த விசாரணையை 8 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.