தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வயதான தம்பதி கொலை சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அடுத்த பில்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் (80). இவரது மனைவி, ஓய்வுபெற்ற ஆசிரியர் சுலோச்சனா (75). இவர்கள் இருவரும் வீட்டருகிலேயே கொலை செய்யப்பட்டு கிடப்பது கடந்த 13-ம் தேதி காலை தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்களுக்கு தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், பணத் தேவைக்காக திருடச் சென்ற இளைஞர்கள் வயதான தம்பதியை மிரட்டி செல்போன், நகை, ஏடிஎம் கார்டு, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தம்பதியரை தாக்கி கொலை செய்து விட்டு சென்றதும் தெரிய வந்தது.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் (19), பொறியியல் கல்லூரி மாணவர் முகேஷ் (19), டிப்ளமோ மாணவர் ஹரிஸ் (20) ஆகிய 3 இளைஞர்களை நேற்று போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வங்கி கணக்குப் புத்தகம், ஏடிஎம் கார்டு, செல்போன்கள், தங்கநகை, பணம் ரூ.18 ஆயிரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தலைமறைவாக உள்ள, பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி உட்பட 3 நபர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதுகுறித்துகாவல் கண்காணிப்பாளர் கலைச் செல்வன் கூறும்போது, ‘தலைமறைவாக உள்ள 3 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்.
அப்போது, தருமபுரி டிஎஸ்பி அண்ணாதுரை, அரூர் டிஎஸ்பி ராஜா சோமசுந்தரம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.