கோயம்பேட்டில் ரூ.25 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட துணி வியாபாரி மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் சக்தி வடிவேலன் (35). துணி வியாபாரி. இவரது மனைவி செல்சியா (22). 6 மாத கர்ப்பிணி. சக்தி வடிவேலனுக்கு இடது மார்பில் உள்ள கட்டி தொடர்பாக மருத்துவ ஆலோசனை பெற, மனைவியுடன் கடந்த 14-ம் தேதி சென்னை கோயம்பேடு வந்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மனைவியை அமரவைத்துவிட்டு, நண்பரைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது மனைவியின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், "உங்கள் கணவர் சக்தி வடிவேலனை கடத்தி விட்டோம். ரூ.25 லட்சம் கொடுத்தால் விடுவிப்போம், இல்லையெனில் கொலை செய்து விடுவோம்" என்று கூறிவிட்டு, இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்சியா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார்.கடத்தல் தொடர்பாக கோயம்பேடு போலீஸார் தனிப்படை அமைத்து, விசாரணையைத் தொடங்கினர். மர்ம நபர் பேசிய செல்போன் சிக்னலை அடிப்படையாகக் கொண்டு, விசாரணை நடத்தப்பட்டது. இதில் அந்த இணைப்பு நந்தம்பாக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், கடத்தப்பட்ட சக்தி வடிவேலனை பத்திரமாக மீட்டனர்.அவரைக் கடத்தியதாக சென்னை முகலிவாக்கம் ஸ்டான்லி (40), செங்குன்றம் வினோத்குமார் (47), சாலிகிராமம் மீன் வியாபாரி கருப்பையா (62) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பெரியசாமியைத் தேடி வருகின்றனர்.
கடத்தல் பின்னணி என்ன?
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "தலைமறைவாக உள்ள பெரியசாமி வட்டிக்கு விடும் தொழில் மற்றும் மீன் வியாபாரம் செய்து வருகிறார். தருமபுரியில் மீன் வியாபாரம் செய்வதற்காக சென்றபோது, அங்கு துணி வியாபாரம் செய்துவந்த சக்தி வடிவேலனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், அவருக்கு ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளார். ஆனால், சக்தி வடிவேலன் வட்டி மற்றும் அசல் தொகையைத் திருப்பித் தராமல், காலம் தாழ்த்தியுள்ளார்.
இதற்கிடையில், மீண்டும் தனக்கு பணம் தேவைப்படுகிறது என்று பெரியசாமியிடம், சக்தி வடிவேலன் கேட்டுள்ளார். ஏற்கெனவே வாங்கிய பணத்தை தராததால், இந்த முறை அவரைக் கடத்தி, புதிதாக திருமணம் செய்துள்ளதால் பெண் வீட்டாரை மிரட்டி, முழு தொகையையும் பெற்றுவிடலாம் எனக் கருதிய பெரியசாமி, சக்திவடிவேலனைக் கடத்தத் திட்டமிட்டுள்ளார்.
பின்னர், தனது நண்பர்கள் ஸ்டான்லி, கருப்பையா, வினோத் குமார் ஆகியோர் உதவியுடன், கடந்த 14-ம் தேதி மாலை சென்னை வந்த சக்தி வடிவேலனை காரில் கடத்திச் சென்று, ஓரிடத்தில் அடைத்துவைத்து, மிரட்டியுள்ளனர். பின்னர் சக்தி வடிவேலனை பத்திரமாக மீட்டோம்" என்றனர்.