தமிழகம்

விதிகளை பின்பற்றவில்லை என கடைகளுக்கு சீல் வைப்பதை அரசு நிறுத்த வேண்டும்: வணிகர் சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவில்லை என்று கூறி, கடைகளுக்கு சீல் வைப்பதை நிறுத்த வேண்டும் என்று அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பரவலால் மிகவும் பாதிக்கப்பட்ட வணிகர்கள் மீண்டெழுந்து வரும் நிலையில், கடைகளுக்கு சீல் வைப்பது, அடிக்கடி அபராதம் விதிப்பது போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும்.

கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவில்லை என்று கூறி போடப்பட்ட வழக்குகளை முழுவதுமாக திரும்பப்பெற வேண்டும். அதிகபட்ச தண்டனை, அபராதங்களைக் குறைக்க வேண்டும். அனைத்து உணவகங்கள், டீக்கடைகளை இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்க வேண்டும்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நகைக் கடை, நகை அடகுக் கடை, ஜவுளிக் கடைகள் இயங்கும் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி போன்றவற்றை குறைந்தது 6 மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும். தடுப்பூசி போடும்போது, வணிகர்களை முன்களப் பணியாளர்களாக கருதி, முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT