தமிழகம்

சென்னை குடிநீருக்காக கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்படும்: கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு ஒரு மாதத்தில் 1.26 டிஎம்சி வந்துள்ளது- நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து, சென்னைக் குடிநீருக்காக திறக்கப்பட்டு வரும் கிருஷ்ணா நீர், கடந்த ஒரு மாதத்தில் 1.26 டிஎம்சி அளவில் பூண்டி ஏரிக்கு வந்தடைந்துள்ளது.

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர மாநில அரசு, சென்னைக் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் இருகட்டங்களாக 12 டி.எம்.சி. கிருஷ்ணாநீர் வழங்க வேண்டும். அந்த வகையில், கடந்த ஆண்டு செப். 18-ம்தேதி முதல், கடந்த பிப். 20-ம் தேதிவரை, கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் 7.656 டிஎம்சி அளவில் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையின் விளைவாக, சென்னை குடிநீருக்காக கடந்த மாதம் 14-ம் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை, கிருஷ்ணா கால்வாயில் ஆந்திர அரசு திறந்து வருகிறது.

தமிழக எல்லையான, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு கடந்த 16-ம் தேதி காலை வந்தடைந்த அந்நீர், அன்று மாலையே பூண்டி ஏரியை வந்தடைந்தது.

ஆந்திர மாநில விவசாய பயன்பாடு மற்றும் சென்னை குடிநீர் தேவைக்காக நேற்றைய நிலவரப்படி, கண்டலேறு அணையில் விநாடிக்கு 2,100 கன அடிஅளவில் திறக்கப்படும் கிருஷ்ணாநீர், நேற்று மாலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 620 கனஅடி அளவில் வந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு வரும் கிருஷ்ணா நீர் கடந்த ஒரு மாதத்தில் 1.26 டிஎம்சி அளவில், பூண்டி ஏரிக்கு வந்துள்ளது.

இதனால், 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் நேற்றைய நிலவரப்படி, 925 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. இதில், விநாடிக்கு 9 கன அடி நீர் பேபி கால்வாயில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT