தமிழகம்

குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்டவர் மீட்பு: ராணுவ வீரர் உட்பட இருவர் தலைமறைவு

செய்திப்பிரிவு

சிவங்கங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள மினிதான்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செபஸ்டின் ராஜ்(29). ராணுவ வீரர். இவர்,குஜராத் கட்ச் பகுதியைச் சேர்ந்தஷகீல் என்பவரிடம் ரூ.20 லட்சம் கொடுத்து, அதை தங்கத்தில் முதலீடு செய்யும்படி கூறியுள்ளார். ஆனால், பணத்தை திரும்பி கேட்கும்போது, திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் அவர்களிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பேச்சுவார்த்தைக்காக தனது அண்ணன் ஜான் ஆரோக்கியசாமி(32), நண்பர்கள் காளையார்கோவிலைச் சேர்ந்த ஜான்சன்(25), ராமநாதபுரம் திருவாடனை ராதானூரைச் சேர்ந்த முகமது பட்டாணி(29) ஆகியோருடன் குஜராத் சென்றார் செபஸ்டின் ராஜ்.

பணம் கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக ஷகீலை அழைத்தபோது, அவர் வராமல், நண்பர் ரங்கேஹசீபா(19) என்பவரை அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும், ரங்கேஹசீபாவை காரில் கடத்திக் கொண்டு, தமிழகம் திரும்பினர்.

போலீஸுக்கு தகவல்

இது தொடர்பாக ரங்கேஹசீபாவின் உறவினர்கள், குஜராத் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை வந்த குஜராத் போலீஸார், சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் அவர்களைத் தேடியபோது, சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர், சுங்குவார்சத்திரம் போலீஸாரின் உதவியுடன் குஜராத் போலீஸார் தேடியதில், ஜான்சன் மட்டும் சிக்கினார். மற்ற இருவரும் ரங்கேஹசீபாவுடன் தப்பிவிட்டனர்.

2 பேர் தப்பியோட்டம்

இதையடுத்து, அருகில் உள்ள சோதனைச் சாவடிகளுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். காவேரிப்பாக்கம் அருகே பாலுசெட்டி சத்திரம் சோதனைச் சாவடி அருகே, கடத்தல்காரர்களை போலீஸார் மடக்கினர். அப்போது செபஸ்டின் ராஜ், முகமது பட்டாணி ஆகியோர் தப்பியோடிவிட்டனர். செபஸ்டின் ராஜின் அண்ணன் ஜான்ஆரோக்கியசாமி சிக்கினார். காரிலிருந்த ரங்கேஹசீபாவையும் போலீஸார் மீட்டனர். ஜான்சன், ஜான்ஆரோக்கியசாமியைக் கைது செய்த போலீஸார், செபஸ்டின்ராஜ், முகமது பட்டாணியைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT