என்எல்சி மருத்துவமனையில் மணிக்கு 24 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை இணையமைச்சர் ராவ் சாஹிப் பாட்டில் தன்வே காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
நெய்வேலியில் கரோனா தாக்கத்தாலும், அதன்விளைவாக மூச்சுத் திணறலாலும் பலர் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூக மேம்பாட்டுத் துறை மூலம் கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் பல்வேறு உதவிகளை செய்து வந்தது.
அதேநேரத்தில் என்எல்சி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை காப்பாற்றும் நோக்கில் ஆக்சிஜன் ஆலை நிறுவ முடிவு செய்தது. அதன்படி மருத்துவமனை வளாகத்திலேயே ரூ.79.6 லட்சம் மதிப்பீட்டில் மணிக்கு24 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவியுள்ளது. இதன்மூலம் நாளொன்றுக்கு 100 பேருக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை ஆக்சிஜன் செலுத்த முடியும். இந்த ஆலை திறப்பு விழா நேற்று மருத்துவமனை வளாகத்தில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
மத்திய நிலக்கரித் துறை செயலாளர் அனில்குமார் ஜெயின்காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். மத்தியரயில்வே, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணையமைச்சர் ராவ்சாஹிப் பாட்டில் தான்வே தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தலைமைவகித்துப் பேசிய நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார், ஊழியர்களின் நலன் கருதி நிறுவனம் மேற்கொண்டும் சீரிய பணிகளில் இதுவும் ஒரு மைல்கல். இதன்மூலம் ஊழியர்கள் நலன் காக்கப்படும். இந்த ஆலை திறக்கப்படும் அதேநேரத்தில் சிடி ஸ்கேன் பிரிவும் திறக்கப்பட்டு, நோய் பாதிப்புகளை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், மருத்துவமனை தலைமை அதிகாரி சத்தியமூர்த்தி மற்றும் நிறுவன இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.
மனிதவளத்துறை இயக்குர் ஆர். விக்ரமன் நன்றி கூறினார்.