தமிழகம்

சிவகங்கை அருகே 50 குழந்தைகளுக்காக எம்எல்ஏ சிபாரிசு செய்தால் விரைவில் பள்ளி தொடக்கம்

செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே 50 குழந்தை களுக்காக புதிதாக பள்ளி தொடங்க கோப்பு அனுப்பப்பட்ட நிலையில், எம்எல்ஏ சிபாரிசு இருந்தால் இந்த கல்வியாண்டிலேயே பள்ளி தொடங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம் கவுரிப் பட்டி ஊராட்சியில் அருகருகே உள்ள திருவேலங்குடி, காரம்பட்டி கிராமத்தில் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 50 குழந்தைகள் இருந்தும் பள்ளிக் கூடம் இல்லை.

இதனால் அவர்கள் காளையார் மங்கலம் (5 கி.மீ.), ஒக்கூர் (8 கி.மீ.,), நாட்டரசன்கோட்டை (4 கி.மீ.) ஆகிய கிராமங்களில் படித்து வருகின்றனர்.

கரோனா ஊரடங்குக்கு முன்பாக அவர்கள் தினமும் நடந்தும், சரக்கு வாகனங்களிலும் பள்ளிக்குச் சென்று வந்தனர். அரசு விதிமுறைப்படி 25 மாணவர்கள் இருந்தாலே தொடக்கப் பள்ளி தொடங்கலாம்.

கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டியதை அடுத்து ஓராண்டுக்கு முன்பு புதிதாக பள்ளி தொடங்க வலியுறுத்தி, கிராமமக்கள் ஊரை விட்டு வெளியேறி கோயிலில் தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து, அப்போதைய ஆட்சியர் ஜெயகாந்தன் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுத்தார். ஆனால், அக்கிராமத்தில் அரசு நிலம் இல்லாததால், பள்ளி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டே தனியார் சார்பில் கல்வித் துறைக்கு 60 சென்ட் நிலம் தானமாக கொடுக்கப்பட்டது. இருந்த போதிலும், கடந்த கல்வியாண்டில் திருவேலங்குடியில் புதிய தொடக்கப் பள்ளி அறிவிக்க வில்லை. இந்நிலையில் இந்த கல்வியாண்டிலாவது தொடக்கப் பள்ளி தொடங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘திருவேலங்குடியில் பள்ளி தொடங்க அனுமதி கோரி அறிக்கை அனுப்பி விட்டோம். தொகுதி எம்எல்ஏ சிபாரிசு செய்தால், இந்த கல்வியாண்டே கிடைத்துவிடும்,’ என்று கூறி னார்.

இதையடுத்து எம்எல்ஏ சிபாரிசு செய்து தொடக்கப் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT