தமிழகம்

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் வார்டுக்கு கூடுதல் நிதி: திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பால் நிறுத்தம்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் வார்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அம்முடிவு நிறுத்திவைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. அதிமுக கவுன்சிலர்கள் காத்திருந்தனர். பிற்பகல் 12.30 மணிக்கு திமுக கவுன்சிலர்கள் வந்ததால் அதன்பின் கூட்டம் தொடங் கியது.

தலைவர் பொன்.மணிபாஸ்கரன் (அதிமுக) தலைமையிலும், துணைத் தலைவர் சரஸ்வதி அண்ணா (அதிமுக), மாவட்ட ஊராட்சிச் செயலர் பழனிச்சாமி முன்னிலையிலும் கூட்டம் நடந்தது. அதிமுக கவுன்சிலர்கள் கருப்பையா, ராமசாமி பேசுகையில், ‘பொதுநிதியை கவுன்சிலர்கள் அனைவரின் வார்டு களுக்கும் சமமாகப் பிரித்துக் கொள்வோம். தலைவர் வார்டுக்கு மட்டும் இரு மடங்கு நிதி ஒதுக்குவோம்,’ என்றனர். ஆனால், அதை திமுக மாவட்ட கவுன்சிலர்கள் மதிவாணன், ரவி, நாகானி செந்தில்குமார் ஆகியோர் ஏற்க மறுத்தனர். மேலும் அவர்கள் பேசுகையில், ‘கவுன்சிலர்களை போன்று தலைவர் வார்டுக்கும் சமமாகத்தான் பிரிக்க வேண்டும்,’ என்றனர்.

இதை அதிமுக கவுன்சிலர்கள் ஏற்க மறுத்துப் பேசுகையில், ‘தலைவருக்கு மரியாதை கொடுத்து, மற்ற மாவட்டங்களைப் போன்று இரு மடங்கு நிதி ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றரை மடங்காவது நிதி ஒதுக்க வேண்டும்,’ என்றனர்.

ஆனால் ‘அதிமுக, திமுக இரு தரப்பிலும் சமமான கவுன்சிலர்கள் இருப்பதால் நீங்கள் சொல்வதைக் கேட்க முடியாது,’ என திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் இழுபறி நீடித்தது.

இறுதியில் அனைத்து கவுன்சிலர் களுக்கும் சமமாகப் பிரிப்பது எனவும், வார்டுக்கு தலா ரூ.35 லட்சம் ஒதுக்குவது எனவும் முடிவானது.

ஆனால் அதனை மாவட்ட ஊராட்சி செயலர் பழனிச்சாமி ஏற்க மறுத்து வார்டுக்கு ரூ.30 லட்சம் மட்டுமே ஒதுக்க முடியும் என தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். பின்னர் தலா ரூ.35 லட்சம் ஒதுக்க மாவட்ட ஊராட்சிச் செயலர் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து முதல் வராக மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக கே.ஆர்.பெரியகருப்பன் தேர்வானதுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT