நிலாவூர் பகுதியில் படகு இல்லத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். 
தமிழகம்

ஊட்டி, கொடைக்கானல் போல ஏலகிரி மலையை மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலமாக மாற்ற திட்டம்

ந. சரவணன்

ஊட்டி, கொடைக்கானலுக்கு நிகராக ஏலகிரி மலையை மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலமாக மாற்ற திட்ட அறிக்கை தயார் செய்ய அதிகாரிகளுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலைக்கு உட்பட்ட பள்ளகனியூர் பகுதியில் 25 ஏக்கர் பரப்பில் தாவரவியல் பூங்கா அமைக்கவும், 8 ஏக்கரில் விளையாட்டு அரங்கம் அமைக்கவும், நிலாவூர் கிராமத்தில் மலர் பூங்கா அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான பணிகள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று (ஜூலை 16) ஆய்வு செய்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க முதலில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் தற்போது பள்ளகனியூர் பகுதியில் 8 ஏக்கர் பரப்பில் விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு அரங்கத்தில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத் தளம், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டுத் தளங்கள், நீச்சல் குளம், கிரிக்கெட் பயிற்சி உள்ளிட்ட விளையாட்டுத் தளங்களை அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பள்ளகனியூர் பகுதியில் தோட்டக்கலைத்துறை சார்பில் சுமார் 25 ஏக்கர் பரப்பில் தாவரவியல் பூங்காவும் அமைக்கப்பட உள்ளன.

பள்ளகனியூர் கிராமத்தில் தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தை ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

நிலாவூர் கிராமத்தில் உள்ள ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தி, ஏரியைச் சுற்றி மரக்கன்றுகள் நட்டு, சிறுவர் பூங்கா அமைக்கவும், படகு இல்லம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, அத்தனாவூர் படகு இல்லத்தை மேம்படுத்தவும், சிறுவர் பூங்கா, தாவரவியல் பூங்கா, விளையாட்டு அரங்கம், மலர் மற்றும் பழப் பூங்கா, சாகச விளையாட்டு அமைப்புகள் உள்ளிட்டவற்றை ஏலகிரி மலையில் கொண்டுவர திட்டமிட்டு அதற்கான இடங்கள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த வசதிகளை ஏலகிரி மலையில் ஏற்படுத்தினால் அடுத்த 2 ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். அதன் மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். மாவட்டத்துக்கும் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்படும். ஊட்டி, கொடைக்கானல் போல ஏலகிரி மலையை மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலமாக மாற்ற, திட்ட அறிக்கையைத் தயார் செய்து விரைவாக வழங்கும்படி பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத்துறை, விளையாட்டுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.

ஆட்சியர் ஆய்வு செய்தபோது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மோகன், பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் பிரபாகர், திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கப் பொறுப்பாளர் ஜான் உட்படப் பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT