தமிழகம்

மேகதாது அணை பிரச்சினை: துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு மத்திய அமைச்சருடன் சந்திப்பு

செய்திப்பிரிவு

கர்நாடக அரசு கட்டும் மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் டெல்லி சென்ற அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் தமிழக முதல்வர், பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரினார்.

மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியபோது, அணை அமைந்திட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனத் தமிழக முதல்வர் பதில் கடிதம் அனுப்பினார்.

மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள சட்டமன்ற அனைத்துக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் கூட்டினார்.

இந்தக் கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பேச அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசுக்குக் கண்டனம்

கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய மத்திய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதியையும் வழங்கக் கூடாது என மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது.

2. தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

3. கூட்டத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் சென்று மத்திய அரசிடம் அளிப்பது

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது என மூன்று தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் 3-வது தீர்மான அடிப்படையில் தமிழக அரசியல் கட்சிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி புறப்பட்டுச் சென்றன. இந்தக் குழுவில் காவிரி விவகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.

திமுக சார்பில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் டி.ஜெயக்குமார், காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, பாமக சார்பில் ஜி.கே.மணி, மதிமுக சார்பில் வைகோ, விசிக சார்பில் திருமாவளவன், மார்க்சிஸ்ட் சார்பில் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் என்.பெரியசாமி, மமக சார்பில் ஜவாஹிருல்லா, பாஜக சார்பில் பால் கனகராஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லி சென்ற குழுவில் உள்ளனர்.

இந்தக் குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திப்பதற்கு முன் தனியாக துரைமுருகன் தலைமையில் ஆலோசனை நடத்தியது. மத்திய அமைச்சரிடம் என்னென்ன கருத்துகளைக் கூறுவது, யார் யார் பேசுவது என்பது குறித்தும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பின்னர் அனைவரும் மத்திய அமைச்சரைச் சந்தித்துப் பேசினர்.

SCROLL FOR NEXT