பொதுப் போக்குவரத்து, கோயில்கள் திறக்கப்பட்டதால், தென் தமிழகத்தின் முக்கியமான மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மீண்டும் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் மலர்களின் விலை பலமடங்கு உயர்ந்தது.
தென் தமிழகத்தில் உள்ளூர் மலர் விற்பனைக்கும், வெளிநாட்டு மலர் ஏற்றுமதிக்கும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை முக்கிய இடம் வகிக்கிறது. ஓசூர் ரோஜா, அலங்கார மலர்கள் முதல் உள்ளூரில் உற்பத்தியாகும் பிரசித்தி பெற்ற மதுரை மல்லிகை, செவ்வந்தி உள்ளிட்ட பலவகை மலர் வகைகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தினமும் 500 டன்னுக்கு மேல் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. கரோனா ஊரடங்கால் விவசாயிகள் மலர் செடிகளைச் சரியாகப் பராமரிக்காமல் விட்டதால், தமிழகம் முழுவதுமே மலர் தோட்டங்கள் அழிந்ததால் மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் வரத்து தற்போது 200 டன்னாகச் சரிந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மதுரை மல்லிகை, ஓசூர் ரோஜா, பட்டன் ரோஸ், செவ்வந்தி ஆகிய பூக்கள் பெரும் வரவேற்பைப் பெறும். இதில், மல்லிகை உள்ளூர் விற்பனைக்குப் போக துபாய், மலேசியா, அபுதாபி, ரியாத், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கிறது.
கரோனா ஊரடங்கால் கடந்த 6 மாதமாக மாட்டுத்தாவணி மலர் சந்தை பூக்கள் வாங்க ஆள் வராமலே முடங்கியது. விலைமதிப்பற்ற மதுரை மல்லிகைப் பூக்கள் கூட வாங்க ஆளில்லாமல் கடந்த மாதம், குப்பைத் தொட்டிகளில் குவியல் குவியலாகக் கொட்டப்பட்ட பரிதாபம் நடந்தது.
இந்நிலையில், தற்போது பொதுப் போக்குவரத்து முழு அளவில் செயல்படத் தொடங்கியதோடு, கோயில்களும் திறக்கப்பட்டுள்ளதால் மாட்டுத்தாவணி மலர் சந்தை மீண்டும் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துள்ளது. பேருந்துப் போக்குவரத்து தொடங்கியதால், வெளியூர் வியாபாரிகள் பூக்கள் வாங்க மாட்டுத்தாவணி மலர் சந்தையில் குவியத் தொடங்கியுள்ளனர்.
முகூர்த்த நாட்கள், கோயில் பூஜைகளுக்காக அதிக அளவு பூக்கள் தேவைப்படும் நிலையில், தற்போது பூக்கள் இல்லாமல் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகக் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பூக்கள் விலை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, மாட்டுத்தாவணி மலர் சந்தை பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் சோ.ராமச்சந்திரன் கூறுகையில், "கடந்த மாதம் வாங்க ஆளில்லாமல் குப்பைக்குச் சென்ற மதுரை மல்லிகைப் பூக்கள், முகூர்த்த நாட்களால் தற்போது கிலோ ரூ.700-க்கு உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் இதே நாட்களில் மதுரை மல்லிகை 15 டன் முதல் 20 டன் வரை விற்பனைக்கு வரும். ஆனால், தற்போது 5 டன் மட்டுமே வருகிறது. அதனால், வெளிநாடுகள் ஏற்றுமதியும் தற்போது குறைவாகவே நடக்கிறது.
கோயில் பூஜைகள், முகூர்த்த நாட்களால் மற்ற பூக்கள் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.10-க்கு விற்ற சம்பங்கி, தற்போது ரூ.150-க்கும், ரூ.30-க்கு விற்ற அரளி தற்போது ரூ.200க்கும், ரூ.30-க்கு விற்ற செவ்வந்தி தற்போது ரூ.150க்கும், ரூ.10 முதல் ரூ.20 வரை விற்ற பட்டன் ரோஸ் தற்போது ரூ.100-க்கும் விற்கிறது. அதேபோல், கடந்த மாதம் ரூ.100-க்கு விற்ற பிச்சிப்பூ தற்போது ரூ.400க்கும், ரூ.100-க்கு விற்ற முல்லைப்பூ தற்போது ரூ.300-க்கும் விற்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.