எல்.முருகன்: கோப்புப்படம் 
தமிழகம்

மத்திய அமைச்சரானபின் சென்னை பயணம்: எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு

செய்திப்பிரிவு

மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முதலில் சென்னை வந்த எல்.முருகனுக்கு, தமிழக பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த 8-ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் இணையமைச்சராகப் பதவியேற்றார். அவருக்கு மீன்வளத்துறை, கால்நடை, பால்வளத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை வழங்கப்பட்டது.

பதவியேற்றபின் அவர் முதன்முதலில் இன்று (ஜூலை 16) சென்னை வந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், தொண்டர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதன்பின், அங்கிருந்து எல்.முருகன் புறப்பட்டு, தன் இல்லத்துக்குச் சென்றார்.

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில், எல்.முருகன் கலந்து கொள்கிறார்.

எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டபின், தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை, மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT