தமிழகம்

வேலைவாய்ப்பை அதிகரிக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இளைஞர்களுக்கு அவசியம்: அமைச்சர் சி.வி.கணேசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

வேலைவாய்ப்பை அதிகரிக்க திறன் மேம்பாட்டு பயிற்சி மிகவும் அவசியம் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் வலியுறுத்தினார்.

ஆண்டுதோறும் ஜூலை 15-ம்தேதி உலக இளைஞர் திறன் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு, பயிற்சி இயக்ககத்தில் நேற்று விழா நடைபெற்றது. இதில்தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைஅமைச்சர் சி.வி.கணேசன் காணொலி வாயிலாக கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக பல்வேறு குறுகியகால பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பை அதிகரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மிகவும் அவசியம். அரசால் அளிக்கப்படும் திறன் பயிற்சிகளில் இளைஞர்கள் தங்களுக்கு தேவையான பயிற்சி எது என்பதை கண்டறிய வேண்டும். இந்த பயிற்சிகளுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளையும் வழங்குகிறது.

இலவச பயிற்சி, உதவிகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு இலவச பயிற்சியுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கணேசன் கூறினார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் கோ.பிரகாஷ் தலைமையுரை ஆற்றினார். முன்னதாக, வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவ ராவ் வரவேற்றார். விழாவில், இணை இயக்குநர் டி.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT