தூத்துக்குடியில் 2018 மே 22-ல் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச்சூடு, தடியடி சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரித்து வருகிறது. 28-வது கட்ட விசாரணை கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. போலீஸார் 95 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இதுகுறித்து ஒருநபர் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் கூறியது: துப்பாக்கிச்சூடு தொடர்பாக இதுவரை ஆணையம் 1,153 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மொத்தம் 813 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,150 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வரிடம் விசாரணை நடத்த தேவை இல்லை. ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக எதுவும் தெரியாது என கூறிவிட்டார். தேவைப்பட்டால் மட்டுமே அவரிடம் விசாரிப்போம்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தடையில்லாச் சான்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த சிலருக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க பரிந்துரை செய்துள்ளோம்.
காவல்துறை தரப்பில் பலர் காயம் அடைந்திருப்பதாகவும், இழப்பீடு கோரியும் அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார்களோ, அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க பரிந்துரைக்கப்படும் என்றார்.