தமிழகம்

மதுரை சிறையில் கைதி அடித்து கொலை: கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் விபரீதம்

செய்திப்பிரிவு

மதுரை மத்திய சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் கொலை வழக்கில் கைதானவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

மதுரை அரசரடி மத்திய சிறையில் கொலை, கொள்ளை மற்றும் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் கைதான 2,000-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

2015-ம் ஆண்டு கீரைத்துறையில் கொலை வழக்கில் வாழைத்தோப்பு முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்த முனியசாமி மகன் செந்தில் (33) என்பவர் கடந்த 9 மாதங்களுக்கு முன் விசாரணைக் கைதியாக இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், சில மாதங்களுக்கு முன் தந்தையை கொலை செய்த வழக்கில் திருமங்கலம் அரசபட்டியை சேர்ந்த செந்தில்குமாரும் இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருவரும் மனநிலை சரியில்லாதவர்கள் எனக் கூறப்படுகிறது. அதனால் இருவரையும் போலீஸார் ஒரே செல்லில் அடைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் செந்தில்குமார் தாக்கியதில் செந்தில் மயங்கி விழுந்தார். சிறை போலீஸார் செந்திலை மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழி யிலேயே இறந்ததாக தெரிவித்தனர். சிறைத்துறை டிஐஜி கனகராஜ், எஸ்.பி. ஊர்மிளா இதுகுறித்து சிறை போலீஸாரிடம் விசாரித்தனர்.

கொலை செய்த செந்தில்குமார் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுவதால் அவரை சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனை செய்து மேற்கொண்டு அவரை விசாரிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கரிமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கொலை வழக்கில் கைதான விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சிறை போலீஸாரின் தீவிர கண்காணிப்பு இருக்கும். இரு கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொலையாகும் வரை, கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸார் எங்கே சென்றனர். அவர்கள் இவர்களைக் கண்காணிக்கவில்லை என்பது குறித்தும், மனநிலை பாதிக்கப் பட்டதாகக் கூறப்படும் இருவரும் ஒரே செல்லில் எப்படி அடைக்கப்பட்டனர் என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT