தமிழகம்

நம்மவர் தொழிற்சங்க பேரவை தொடக்கம்; அகிம்சை வழி செல்பவர்களால்தான் நல்ல அரசியல் செய்ய முடியும்: மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையை கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடங்கிவைத்தார். அகிம்சை வழியில் செல்பவர்களால் மட்டுமே நல்ல அரசியல் செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடங்கிவைத்து, கட்சி அலுவலக நுழைவுவாயிலில் தொழிற்சங்கப் பேரவையின் கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:

மக்கள் நீதி மய்யத்துக்கான அடிப்படை தகுதி நேர்மை. அது இங்கு மிக அவசியம். கவிஞர் கண்ணதாசனின் வசனம், கருணாநிதியின் வசனம், இளங்கோவன் ஆகியோரது வரிகளைக் கேட்டு கற்றவன் நான். இவர்கள் பேசும் தமிழ் முதலில் புரியாதுதான். புரிந்தால் தமிழ் வாழும். உங்களுக்கு தெரியாவிட்டால், படித்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

யாருக்கும் தோல்விகள் ஏற்படும். ஆனால், ஒருவரது தேர்தல் தோல்விக்கு இவ்வளவு பேர் வருத்தப்பட்டு நான் பார்ப்பது இதுவே முதல்முறை. குழந்தைப் பருவத்தில் வைணவ மந்திரங்களை மனப்பாடமாக உச்சரித்துள்ளேன். அங்கிருந்து பெரியார் திடல் சென்று, பின்னர் காந்தியை அடைந்துள்ளேன். காந்திதான் என் தலைவர்.

நான் இப்படி சொல்வதால் எனக்கும் காங்கிரஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காந்தி போன்றவர்கள்தான் இன்றைய தேவையாக உள்ளனர். வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை. இனி இந்தியா அகிம்சை வழியில் இருக்கும் என்பவர்களால் மட்டுமே நல்ல அரசியல் செய்ய முடியும். நாட்டின் வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT