தமிழகம்

விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை: 5 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு

செய்திப்பிரிவு

விவசாயிகளுக்கும், விவசாய திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் 2021-22-ம் ஆண்டுக்கான தனி நிதி நிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில வேளாண்மை- உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியது: வேளாண் பரப்பை 2 மடங்காக உயர்த்துவதுடன், வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கு இரண்டு போக சாகுபடியை கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் உறுதுணையாக இருப்பார். விவசாயிகளுக்கும், விவசாய திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது:

விவசாயிகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்டு, பதிவு செய்து, அதன் பேரில் வேளாண் நிதி நிலை அறிக்கை தயாரிக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. முதல்வர் அறிவிப்பின்படி விவசாயிகளுக்கான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றார்.

வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை- உழவர் நலத் துறை அரசு செயலர் கே.சி.சமயமூர்த்தி, வேளாண்மை- உழவர் நலத் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, வேளாண் விற்பனை- வணிகத் துறை ஆணையர் மா.வள்ளலார், தோட்டக்கலைத் துறை- மலைப் பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி, சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநர் எம்.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முருகேசன், விதைச்சான்று- அங்ககச் சான்றிதழ் துறை இயக்குநர் சுப்பையா, வேளாண் இணை இயக்குநர் முருகேசன் மற்றும் எம்எல்ஏக்கள் அ.சவுந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, எஸ்.இனிகோ இருதயராஜ், சீ.கதிரவன், பி.அப்துல்சமது, எம்.பிரபாகரன், வை.முத்துராஜா, க.சொ.க.கண்ணன், கு.சின்னப்பா, தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக ஏரி- மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விசுவநாதன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சிவசூரியன் உட்பட பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT