தமிழகம்

தேங்காய் எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் அமெரிக்கா: தென்னை வளர்ச்சி வாரியத் தலைவர் தகவல்

பி.டி.ரவிச்சந்திரன்

அகில இந்திய தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தொழில்முனைவோர் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் உள்ள ஆர்விஎஸ் பத்மாவதி தோட்டக் கலை கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் அகில இந்திய தென்னை வளர்ச்சி வாரியத் தலைவர் கே.ஜோஸ் பேசியதாவது:

உலக அளவில் தென்னை உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அடுத்தடுத்த நிலையில் பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், சீனா ஆகிய நாடுகள் உள்ளன.

60 ஆண்டுகளுக்கு முன்பு தேங்காயில் இருந்து எண்ணெய் மட்டும் தயாரிக்கப்பட்டது. இப்பொழுது பல மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தான் அதிகளவு தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. முதலில் குழந்தைகளுக்குத் தான் தேங் காய் எண்ணெய்யை அமெரிக்கர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். பின்னர் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் தயாரிக்கவும், அடுத்ததாக சமையலுக்கும் அதிகம் பயன்படுத்துகின்றனர். தேங்காய் எண்ணெய்யில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக 0.89 சதவீதம்தான் கொழுப்பு உள்ளது.

தேங்காய் பாலில் கொழுப்புச் சத்து மிகக் குறைவு. தமிழகத்தில் தேங்காய் மூலம் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க, மூலப் பொருட்கள் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. தொழிலாளர் பிரச்சினையும் இல்லை. எனவே தேங்காயில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடலாம். இதற்கு தென்னை வாரியம் 25 சதவீத மானியம் வழங்குகிறது. இந்தியாவில் இருந்து 32 நாடுகளுக்கு தென்னை பொரு ட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே தென்னை சம்பந்தமான தொழில் தொடங்க தொழில் முனைவோர் முன்வர வேண்டும் என்றார்.

மாநில வேளாண்மைத் துறை இயக்குநர் எம். ராஜேந்திரன் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள தென்னை மரங்களில் ஒரு ஆண்டுக்கு 70 கோடி காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் 14 லட்சம் ஏக்கர் பரப்பில் தென்னை சாகுபடி நடக்கிறது. தென்னை சாகுபடி பரப்பில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் உற்பத்தி, உற்பத்தி திறனில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. பிற மாநிலங்களில் தென்னை தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ளது.

ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் வேளாண்மைத் துறையின்கீழ் உள்ளது. தென்னை வளர்ச்சி வாரியக் கிளை உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணைப் பகுதியில் 100 ஏக்கரில் அமைய உள்ளது.

தமிழகத்தில் உள்ள தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்கத் தேவையில்லை. உற்பத்தியைத்தான் அதிகரிக்கவேண்டும். ஏனென்றால், பல தென்னந்தோப்புகள் பராமரிப்பின்றி உள்ளன. இவற்றை முறையாக பராமரித்தாலே உற்பத்தியை அதிகரிக்கலாம் என்றார்.

கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.ராம சாமி பேசுகையில், குழந்தைகளை வளர்ப் பதுபோல தென்னையை பராமரித்து வளர்க்க வேண்டும். அதிக அளவு இளநீர் உள்ள காய்களை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில்தான் உற்பத்தி செய்கின்றனர். இழப்பில்லாமல் விவசாயம் செய்யவேண்டும் என்றால் அதற்கு தென்னை மரம் வளர்க்கவேண்டும். தொழில்நுட்பங்கள் விவசாயிகளை சென்றடைய அரசு அதிகாரிகள் உதவவேண்டும், என்றார்.

ஆர்விஎஸ் தோட்டக்கலைக்கல்லூரித் தலைவர் வி.குப்புச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்..

இரண்டே ஆராய்ச்சி நிலையங்கள்

துணைவேந்தர் க. ராமசாமி மேலும் கூறுகையில், கேரளாவில் பல்வேறு பயிர்களுக்கு என 18 ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில் இரண்டுதான் உள் ளன. அதுவும் சுதந்தி ரத்துக்கு முன், ஆங்கிலேயேர்களால் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து எம்.பி. க்களை தேர்நதெடுத்து அனுப்புகிறோம். ஆனால், ஒவ்வொரு திட்டத்துக்கும் யானையை அசைப்பது போல, சிறிதுசிறிதாக அசைத்து தமிழகத்துக்குக் கொண்டுவரும் நிலை உள்ளது. தென்னை உற்பத்தியில் இந்தி யாவில் முதலிடத்தில் இருந்தாலும் தற்போதுதான் தென்னை வளர்ச்சி வாரி யத்தின் கிளை உடுமலை அமராவதி அணை பகுதியில் அமையவுள்ளது என வேதனையுடன் குறிப்பிட்டார்

SCROLL FOR NEXT