தமிழகம்

திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் அமைந்துள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்: ஆய்வுக்கு வந்த அமைச்சரிடம் பொதுமக்கள் புகார்

செய்திப்பிரிவு

பத்திரப் பதிவு அலுவலகங்களில், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

திருப்பூர் நெருப்பெரிச்சலில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று ஆய்வு செய்தார்.

பதிவுத்துறையை சாராத நபர்கள் உள்ளனரா என ஆய்வு செய்தார். தொடர்ந்து துணை பதிவாளர்களிடம், பத்திரங்களை பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் சரியான தகவல்களை அளிக்க வேண்டும். மேலும் அதிக நேரம் காக்க வைக்ககூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது வெளியே வந்த அமைச்சரிடம், ‘திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது பொதுமக்களிடையே அமைச்சர் பேசியதாவது: பத்திரங்களை பதிவு செய்ய வரும் மக்கள், இடைத்தரகர்களை அணுகாமல், பதிவாளரை சந்தித்து, பத்திரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இடைத்தரகர்களை அணுகுமாறு அதிகாரிகள் தெரிவித்தால், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். நெருப்பெரிச்சலில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளதால், பத்திரப்பதிவுக்கு வந்து செல்ல சிரமமான சூழ்நிலை உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வுகளில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவனருள், பதிவுத்துறை கூடுதல் செயலர் நல்லசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT