எங்களின் எதிரி திமுக தான் என முடிவு செய்துவிட்டோம் என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலம் வழியாக சென்னை சென்ற அவருக்கு சேலம் கொண்டலாம்பட்டியில் நேற்று மாலை பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது:
பொய்யை மட்டும் முதன்மையாக கொண்டு திமுக ஆட்சி செய்கிறது. கடந்த 3 ஆண்டு கால அரசியலை பார்க்கும்போது, திமுகவின் எதிரி பாஜக என்பது தெளிவாகிவிட்டது. நாங்களும் ஏற்றுக் கொண்டு விட்டோம். எங்களின் எதிரி திமுக என்பதை முடிவு செய்துவிட்டோம்.
பிரதமர் மோடியை எதிர்த்தும், வளர்ச்சியை எதிர்த்தும் தான் திமுக அரசியல் செய்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜக தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில பொதுச் செயலாளர் செல்வகுமார், சேலம் மாநகர மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்பாபு, நிர்வாகிகள் முருகானந்தம், அண்ணாதுரை, முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பாஜக ஆட்சி
பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலைக்கு ஈரோடு பழையபாளையம் பகுதியில் பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். அப்போது அவர் பேசுகையில், தமிழக சட்டப்பேரவைக்கு தற்போது பாஜக சார்பில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் சென்றுள்ளனர். 2026-ம் ஆண்டு தேர்தலின்போது, பாஜக சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் செல்ல வேண்டும். இதனை இலக்காக வைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபட வேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதே என் லட்சியம். அதற்கு இரும்புத் தூண்களாக உள்ள பாஜக தொண்டர்கள் கடமையாற்றுவார்கள் என்றார்.