செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நகரில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. மலை மீது சுயம்புமூர்த்தியாக சுவாமி வேதகிரீஸ்வரர் அருள்பாலிப்பதால், பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையை கிரிவலம் வருகின்றனர்.
மேலும், கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாள் மற்றும் பக்தவச்சலேஸ்வரர் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலுக்கு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், வெளியூர்களில் இருந்துவரும் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை.
இந்நிலையில், 2008-ல் தன்னிறைவுத் திட்டத்தில் மலைக் கோயிலின் கிரிவலப்பாதையில் 8 அறைகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. ஆனால், இந்த விடுதியை கோயில் நிர்வாகம் முறையாகப் பராமரிக்காததால் பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் கூறும்போது, “விடுதி அறைகளில் மின்சாரம், குடிநீர் குழாய், படுக்கைகள் போன்ற பல்வேறுவசதிகள் உள்ளன. ஆனால், முறையானபராமரிப்பு இல்லாததால், முட்புதர்கள் மண்டி சிதிலமடைந்துள்ளது. விடுதி வளாகத்துக்கு சுற்றுச்சுவர்அமைத்து, காவலரை நியமித்தால் மீண்டும் பக்தர்கள் தங்குவர்.
இதன்மூலம், கோயில் நிர்வாகத்துக்குவருவாய்கிடைப்பதுடன், கிரிவலப் பாதையில் பக்தர்களும் அச்சமின்றி செல்லும் நிலை உருவாகும்” என்றனர்.
கோயில் நிர்வாகம் தரப்பில் கூறும்போது, “பக்தர்கள்தங்கும் விடுதியைச் சுற்றியுள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சுற்றுச்சுவர் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து, நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம்” என்றனர்.