திருவண்ணாமலை மத்திய ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்களிடம் கரோனா தடுப்பூசி பெட்டியை வழங்கிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ். அருகில், நகராட்சி ஆணையாளர் சந்திரா உள்ளிட்டோர். 
தமிழகம்

திருவண்ணாமலை நகராட்சியில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்: மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை நகராட்சியில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக அறிவிக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் கரோனா தடுப்பூசி செலுத் திக் கொண்டவர்கள் எண்ணிக் கையை அதிகரிக்க தீவிர முயற்சி கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தி.மலை நகராட்சியில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நகராட்சியாக அறிவிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் உள்ள 39 வாக்குச்சாவடி மையங்கள் சிறப்பு முகாமாக மாற்றப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, முழு வீச்சில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார். இதற்காக, முத்து விநாயகர் கோயில் தெருவில் உள்ள நகராட்சி மத்திய ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் முருகேஷ், அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து அறிவுரை வழங்கினார்.

தரமான தடுப்பூசிதான்...

மேலும், கரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே மக்களை காக்கும் ஆயுதம். கோவிஷீல்ட், கோவாக்சின் என எந்த தடுப்பூசியாக இருந்தாலும் இரண்டுமே தரமான தடுப்பூசிதான் என்பதை பொதுமக்களிடம் விளக்க வேண்டும். திருவண்ணாமலை நகருக்கு தேவையான தடுப்பூசி களை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் முயற்சி யால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அப்போது, திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் சந்திரா மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் உள்ள தடுப்பூசி முகாமில் மருத்துவர், செவிலியர் அடங்கிய குழுவினர் இருப்பார்கள். முகாம் தொடர்பாக அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மகளிர் குழுவினர், ஊட்டச்சத்து பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள் அடங்கிய குழுவினர் வீடு, வீடாகச் சென்று தெரிவிப்பார்கள். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விவரங் களையும் சேகரித்து அதனை சரிபார்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT