தமிழக-ஆந்திர எல்லைப் பகுதி யிலும், நீர்பிடிப்புப் பகுதிகளிலும் மழையளவு குறைந்து விட்டதால், வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் நீர்வரத்து நின்று விட்டது.
ஆந்திராவில் உள்ள பாலாற் றுப்பகுதிகளில் 22 இடங்களில் அம்மாநில அரசு தடுப்பணைகளை கட்டியுள்ளன. ஒவ்வொரு தடுப் பணையும் 12 அடி முதல் 40 அடி உயரம் வரை கட்டப்பட்டு தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, கடந்த வாரம் பெய்த கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், ஆந்திராவில் கட்டப் பட்டுள்ள 22 தடுப்பணைகளும் நிரம்பி அதிலிருந்தும் உபரி நீர் வெளியேறி வருகிறது.
இந்நிலையில், கடந்த 8-ம் தேதி தமிழக - ஆந்திர எல்லை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதேபோல, வாணியம்பாடி அடுத்த தமிழக எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையும் முழுமையாக நிரம்பி அதிலிருந்து வெளியேறி தண்ணீர் பாலாற் றில் பெருவெள்ளமாக ஓடியது. இதனால், பொதுமக்களும், விவ சாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
தொடர் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளமானது கடந்த 9-ம் தேதி இரவு ஆம்பூர் பாலாற்றை கடந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள், பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடி வந்த புது வெள்ளத்தை மலர் தூவியும், கற்பூரம் ஏற்றியும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலாற்று தண்ணீரை ஏரிகளுக்கு திருப்பிவிடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் பள்ளி கொண்டா பாலாற்றை கடந்தது. அங்கிருந்து செதுவாலை, கந்தனேரி ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீர்வரத்து குறைந்து விட்டது
இந்நிலையில், ஆந்திர வனப் பகுதியிலும் நீர்பிடிப்பு பகுதி களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் பாலாற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. நேற்று காலையில் வாணியம்பாடி அடுத்த புல்லூர் தடுப் பணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு வந்துக் கொண்டிருக்கிறது.
இதனால், வேலூர் மாவட் டத்தில் உள்ள பாலாற்றில் தண்ணீர் வருவது சுத்தமாக நின்று விட்டது. பாலாற்று வெள்ளத்தால் ஏரிகள் அனைத்தும் நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பெருவெள்ளத்தின் வேகம் குறைந்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர்.
தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் மீண்டும் மழை பெய்தால் மட்டுமே பாலாற்றில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதாகவும், பாலாற்று நீரை சேமிக்கவும், பாலாற்றில் மணல் திருட்டை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வரும் காலங்களில் பெருமழை பெய்தால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றுப்பகுதிகளில் நீர்வரத்து முழுமையாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.