தமிழகம்

நாமக்கல்லில் அரசு பெண் ஊழியர் தற்கொலை முயற்சி: உயர் அதிகாரியின் தொல்லை காரணமா?

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் அலுவலக பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர் அதிகாரிகள் தொல்லை காரணமாக அவர் விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த நடந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி காந்திமதி (42). இவர் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் பதிவேடு காப்பாளராக (ரெக்கார்டு கிளார்க்) பணிபுரிந்து வருகிறார்.

நேற்று மதியம் இவர் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது.

தகவல் அறிந்த நாமக்கல் போலீஸார், காந்திமதியிடம் விசாரணை நடத்தினர். விசாரணை குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் ஓய்வு பெற்றுள்ளார். அவரது பணிப்பதிவேடு சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்துக்கு வந்துள்ளது. அந்த பதிவேட்டை பதிவேடு காப்பாளர் பராமரிக்க வேண்டும்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவரின் பதிவேட்டை தருமாறு காந்திமதியிடம், உயர் அதிகாரி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு கேட்டதாக கூறப்படுகிறது. தன்னிடம் அந்த பதிவேடு இல்லை எனவும், பதிவேட்டை வழங்க வேண்டிய ஊழியர் தமக்கு வழங்கவில்லை என்றும் காந்திமதி கூறியதாகவும் தெரிகிறது.

இதை ஏற்க மறுத்த அந்த உயர் அதிகாரி பிப்ரவரி 1-ம் தேதி (இன்று) மதியம் 2 மணிக்குள் பதிவேட்டை வழங்காவிட்டால், போலீஸில் புகார் செய்வதாக எச்சரித்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காந்திமதி நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

உயர் அதிகாரியின் எச்சரிக்கையால் பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாமக்கல் மாவட்ட அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாமக்கல் ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தியிடம், வாட்ஸ் அப் மூலம் கேட்டபோது, ‘‘அரசு பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT