கரோனா குறித்த எதையுமே மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மாவட்ட ஆட்சியர்களிடம் இறப்புகளை மறைக்கக்கூடாது. ஆர்டி- பிசிஆர் பரிசோதனை முடிவுகளைக் கூட மறைக்கக் கூடாது என்று கூறியுள்ளோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று சென்னையில் அவர் அளித்த பேட்டி:
''தமிழக முதல்வரிடம் பொது நிவாரண நிதியை யாரும் பணமாக அளிப்பதில்லை. கேட்பு வரைவோலை, காசோலை போன்றவை மூலமாக வழங்குகின்றனர். அவற்றை ஆன்லைன் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். நானும், சுகாதாரத் துறைச் செயலாளரும் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுக்குச்சென்றபோது கூட ரூ.77,27,215 தொகையை இன்று தமிழக முதல்வரிடம் வழங்கியிருக்கிறோம். ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஜெனரேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் எவ்வளவு வந்தது என்ற பட்டியலும் உள்ளது.
எந்தெந்த நிறுவனங்களின் சார்பில் உதவிகள் அளிக்கப்பட்டுள்ளனவோ, அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கடிதமும் அளித்து வருகின்றனர். அவற்றையெல்லாம் யார் வேண்டுமானாலும் சென்று பார்த்துக்கொள்ளலாம். அவையெல்லாம் நேர்மையான முறையில் நடைபெற்று வருகின்றன.
ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறுவோரிடமிருந்து அனைத்து மாவட்டங்களிலும் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னையிலும் வசூலிக்கப்படுகிறது. அவற்றையெல்லாம் தினந்தோறும் அல்லது வாரந்தோறும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஆய்வுக்குச் சென்ற அனைத்து மாவட்டங்களிலும் கோவிட்-19 காலகட்டம் இன்னும் முடியவில்லை. அனைவரும் முகக்கவசம், சானிடைசர், சமூக இடைவெளி, தேவையில்லாமல் வெளியில் சென்று சுற்றக்கூடாது போன்றவற்றை அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் வலியுறுத்தியுள்ளோம்.
பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை என்பது வேகமாகப் பரவி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் கூட 30 ஆயிரம் என்ற அளவில் தொற்றின் வேகம் கடந்துகொண்டிருக்கிறது. அதைக் கருத்தில்கொண்டு, தமிழக முதல்வர் மக்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்குத் துணை நின்று, அவற்றையெல்லாம் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
கரோனா குறித்த எதையுமே மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ஆய்வு செய்த 33 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களிடம் இறப்புகளை மறைக்கக்கூடாது. ஆர்டி- பிசிஆர் பரிசோதனை முடிவுகளைக் கூட மறைக்கக் கூடாது என்று அறிவுறுத்தி, வலியுறுத்திக் கூறியுள்ளோம்''.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.