கரோனாவால் மக்கள் மனஉளைச்சலில் இருப்பதால் புதுச்சேரியில் அனைத்து மத வழிபாட்டு நிகழ்வுகளையும் நடத்த வலியுறுத்தி பாஜக மாநிலத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் முதல்வரிடம் இன்று மாலை கோரிக்கை மனு தந்தனர்.
புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அனைத்து சமுதாய மத வழிபாட்டு விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் விழாக்காலங்களில் அனைத்து மத வழிபாட்டு தலங்களில் விழாக்களை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பாஜக மாநில தலைவர் சாமிநாதன்,உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் இன்று மாலை சந்தித்து மனு அளித்தனர்.
கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அனுமதி அளிக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.
இதுபற்றி மாநிலத்தலைவர் சாமிநாதன் கூறுகையில், "கரோனாவால் மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். ஆடி மாதம் வருவதால் அனைத்து மத வழிபாட்டு நிகழ்வுகளையும் நடத்த அனுமதி தரக்கோரி மனு தந்தோம். திருவிழா மூலம் அமைதி கிடைக்கும் என்பதால் ஆடி விழாக்களை நடத்த கோரியுள்ளோம்." என்று குறிப்பிட்டார்.