தமிழகத்தில் பாஜக அசுரத்தனமாக வளர்ச்சி பெறும் என, திருப்பூரில் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அண்ணாமலை, வரும் 16-ம் தேதி பொறுப்பேற்கிறார். இந்த நிலையில், இன்று (ஜூலை 14) திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் கட்சியினர் அளித்த வரவேற்பை ஏற்ற அவர் பேசியதாவது:
"தமிழகத்தில் உண்மையான சித்தாந்தத்தில் இருக்கக்கூடிய கட்சி பாஜக. உண்மையான நாட்டுப்பற்றும், தேசியப்பற்றும் உள்ள கட்சி பாஜக. இந்த சித்தாந்தத்துக்காகப் பல தொண்டர்கள் உயிரைக் கொடுத்துள்ளனர். ஒசூர், கன்னியாகுமரி மற்றும் கோவை என, பல்வேறு இடங்களில் தங்களது உயிரைக் கொடுத்து பாஜகவினர் கட்சியை வளர்த்துள்ளனர். இத்தனை ஆண்டுகாலமாக பாஜகவுக்குத் தமிழகம் தேவைப்பட்டது. இன்றைக்குத் தமிழகத்துக்கு பாஜக தேவைப்படுகிறது.
திமுக ஆட்சியை இன்றைக்கு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நீட் வேண்டாம்; புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என்கிறது திமுக. சரியாக ஆட்சி செய்கிறார்களா என்றால், அதுவும் கிடையாது. இன்றைக்கு பிரதமர் மோடி வழங்கும் தடுப்பூசியைக் கூட திமுகவினர் மொத்தமாகப் பெற்றுக்கொள்கிறார்கள். திமுக குடும்பத்துக்குத் தடுப்பூசி செல்கிறது. அடுத்த 4 மாதத்தில் திமுகவின் ஒவ்வொரு பொய்யையும், முள்ளையும் வேரறுப்போம்.
பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், தமிழகத்தில் 13 ஆயிரம் கிராமங்களுக்கு பாஜகவை எடுத்துச் செல்ல வேண்டும். வீடுதோறும் சென்றடைய வேண்டும். களத்தில் இனி அதிகம் பணியாற்றுவோம். தமிழகத்தில், வருங்காலம் பாஜகவின் காலம்தான். அடுத்த 3 ஆண்டுகள் நாம் கடுமையாகப் பணி செய்ய வேண்டும். இனியும் நாம் பொறுத்திருக்க முடியாது. நாம் ஆட்சிக்கு வந்தாக வேண்டும். நல்ல சித்தாந்தங்களை நாம் கொண்டுசெல்ல வேண்டும். உங்களுடைய முதன்மை சேவகனாக வரும் 16-ம் தேதி பொறுப்பேற்க உள்ளேன். தமிழகத்தில் அசுரத்தனமாக கட்சி வளர்ச்சி பெறும்".
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.