தமிழகம்

மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்த பிரதமருக்கு விரைவில் கடிதம்: புதுச்சேரி முதல்வர் முடிவு

செ. ஞானபிரகாஷ்

மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்த பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விரைவில் கடிதம் எழுதவுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

மேலும், தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதியாக காரைக்கால் விளங்குவதால், மேகதாது அணை விவகாரத்தில தமிழகத்தோடு புதுவையும் இணைந்து செயல்பட வேண்டு்ம் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனைச் சந்தித்து புதுவையிலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், அமைச்சர் சந்திர பிரியங்கா, காரைக்கால் எம்எல்ஏக்கள் திருமுருகன், பி.ஆர்.சிவா, தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டம் தொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "மேகதாதுவில் கர்நாடக அரசு, அணை கட்டுவதால் காரைக்காலில் விவசாயம் பாதிக்கும். புதுச்சேரிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். அணை கட்டுவதை நிறுத்த பிரதமருக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் புதுச்சேரி அரசு சார்பில் கடிதம் எழுதுவது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT