சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா கோவையில் பயிற்சி மையம் தொடங்குவது, விளையாட்டின் தரத்தை சர்வதேச அளவுக்கு மேம்படுத்த உதவும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் தனியார் பள்ளியுடன் இணைந்து, டென்னிஸ் பயிற்சி மையம் தொடங்கப் போவதாகவும், ஆகஸ்ட் மாதம் இதற்கான பணிகள் தொடங்கும் என்றும் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீர்களில் ஒருவரான ரோகன் போபண்ணா சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விம்பிள்டன், யு.எஸ்.ஓபன், ஃப்ரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் உள்ளிட்ட சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிவரும் இந்திய வீரர் ரோகன் போபண்ணா, இரட்டையர் பிரிவில் கடந்த 2013-ம் ஆண்டில் 3-வது ரேங்க் பெற்று சாதனை படைத்தார். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் பங்கேற்றார்.
கர்நாடகாவில் வசித்துவரும் இவர், இந்தியாவில் டென்னிஸ் விளையாட்டை வளர்க்கும் நோக்கில் ‘ரோகன் போபண்ணா டென்னிஸ் அகாடெமி’ என்ற பெயரில் பயிற்சி மையங்களை நடத்திவருகிறார்.
இந்நிலையில், முதன் முறையாக தமிழகத்தின் கோவையில் டென்னிஸ் அகாடெமியை தொடங்குவதற்கு இங்குள்ள டென்னிஸ் பயிற்சியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், சர்வதேச திறன் கொண்ட வீரர்களை உருவாக்க இது உதவும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, கோவை மெட்ரோ டென்னிஸ் அசோசியேஷன் பயிற்சியாளர் சரவணன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “கோவையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் டென்னிஸ் விளையாட்டு குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு கிடையாது.
ஒருசில இடங்களில் மட்டுமேடென்னிஸ் விளையாட்டுக்கு மைதானங்கள் இருந்தன. பெயரள வில் சிலர் விளையாடுவார்கள். கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக டென்னிஸ் விளையாட்டில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பொது இடங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏராளமான மைதா னங்களையும், அதிக விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்களையும் பார்க்க முடிகிறது. இந்த வளர்ச்சி தொடர வேண்டும்.
வரவேற்பு
கே.ஜி.ரமேஷ் போன்ற சர்வதேச வீரர்கள் ஏற்கெனவே கோவையில் இருந்தாலும், ரோகன் போபண்ணா போன்ற தற்போதைய வீரர்கள் கோவைக்கு வந்து பயிற்சி அளிப்பது வரவேற்புக்குரியது. தற்போது கோவையில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகள் நடை பெறுகின்றன.
இதை சர்வதேச அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு கோவையில் டென்னிஸ் இன்னும் வளர வேண்டும். ரோகன் போபண்ணா போன்ற வர்களின் வருகையால் கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானவர்கள் ஈர்க்கப்பட்டு விளையாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. அதிகளவில் ஒரு விளையாட்டுக்கு வீரர்கள் வரும்போது பல நல்ல திறனுடைய வீரர்களை நாம் உருவாக்க முடியும். கோவையில் டென்னிஸ் விளையாட்டின் தரமும் சர்வதேச அளவுக்கு வளர்ச்சி பெறும்” என்றார்.