‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளுக்காக கோவை முத்தண்ணன் குளக்கரையில் இருந்த 9 கோயில்கள், மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நேற்று இடிக்கப்பட்டன. எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200-க்கும்மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
தடாகம் சாலை முத்தண்ணன் குளக்கரையில் வசித்த மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 1600 பேர் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு அரசு குடியிருப்புகளுக்கு சென்றுவிட்டனர். இதையடுத்து, குளக் கரையில் உள்ள வீடுகள் மற்றும் கோயில்களை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் கோயிலை இடிக்கஎதிர்ப்பு கிளம்பியதால் அதிகாரிகள் திரும்பி சென்றுவிட்டனர். இந்நிலையில், நேற்று காலை முதலே அப்பகுதியில் ஏராளமான போலீஸார் நிறுத்தப்பட்டனர். ஜேசிபி இயந்திரங்களுடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியைத் தொடங்கினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீஸாரின் சமரசத்தை ஏற்காததால் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் 206 பேரை போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் முத்துமாரியம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், கருப்பசாமி கோயில் மற்றும் மரத்தடியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய கோயில்கள் உட்பட 9 கோயில்கள் இடிக்கப்பட்டன.
கோயில்களில் இருந்த சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் உள்ளிட் டவை லாரியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன.