கரோனா இரண்டாம் அலை காரணமாக நெகமத்தில் முடங்கிக் கிடந்த கைத்தறி நெசவு தொழில் மீண்டும் தொடங்கி உள்ளது.
நெகமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கைத்தறி நெசவுத்தொழில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்த தொழிலில் 4000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. கரோனா ஊரடங்குகாரணமாக அனைத்து ஜவுளிக்கடைகளும் மூடப்பட்டன. இதனால்நெகமம் சேலை உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் மற்றும் விற்பனை முற்றிலும் முடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் வேலை இழந்தனர்.
தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து,தமிழகம் முழுவதும் ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த சில வாரங்களாக கைத்தறி நெசவுத்தொழில் மீண்டும் தொடங்கி உள்ளது. தற்போதைய நிலையில், 50 முதல் 60 சதவீதம் அளவில் நெசவு தொழில் நடைபெற்று வருகிறது. கோ-ஆப்டெக்ஸில் இருந்து, நெகமம் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு சேலை ஆர்டர் கிடைத்துள்ளதால், நெசவாளர்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். மொத்த வியாபாரிகளும், நெசவாளர்களுக்கு நூல் வழங்கி, சேலைகளை பெறுகின்றனர்.
“அடுத்தடுத்த மாதங்களில், நெசவுத்தொழில் சூடுபிடிக்கும். தேங்கியிருக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி சேலைகள் விற்பனை ஆகும்” என மொத்தவியாபாரிகள் மற்றும் நெசவாளர் கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.