சொந்த ஊர் திரும்ப விருப்பம் தெரிவித்த ஒடிசா மாநில பெண் தொழிலாளிக்கு பின்னலாடை நிறுவனம் உரிய பதிலளிக்காத நிலையில், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அவரை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது.
ஒடிசா மாநிலம் புரி மாவட்டம் கவுதாபதா பகுதியை சேர்ந்தவர் கிரிதரி பெஹரா. ஆட்டோ ஓட்டுநர். இவரது மகள் ஜசதோ பெஹரா (21). குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வந்த ஜசதோ பெஹரா, பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிக்குச் சேர்ந்தார். சில நாட்களில் அவர் வேலை பிடிக்காத நிலையில், சொந்த மாநிலத்துக்கு செல்ல தனியார் பனியன் நிறுவனத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் கரோனா ஊரடங்கை காரணம் காட்டி, நிர்வாகம் பெண் தொழிலாளிக்கு உரிய பதில் அளிக்கவில்லை.
இந்த நிலையில் ஜசதோ பெஹராவின் தந்தை கிரிதரி பெஹரா, புரி மாவட்ட ஆட்சியர் சமர்த் வர்மா, புரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சந்தோஷ் குமார் ஜெனா ஆகியோரிடம் புகார் அளித்தார். மகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து புகார் மனு திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு வந்தது. தொடர்ந்து அந்த பெண் பணிபுரிந்த, தனியார் நிறுவனத்திடம் பெருமாநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதியுமான கே.சுரேஷ்குமார் முன்னிலையில் கடந்த மாத இறுதியில் விசாரிக்கப்பட்டது. இதில், ஜசதோ பெஹராவை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜசதோ பெஹரா ரயில் மூலம் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.