தமிழகம்

ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

ரயில்வே தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய ரயில்வே அமைச்சகம் நிறைவேற்றிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இந்திய ரயில்வே துறை மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். நாட்டு மக்களின் போக்குவரத்தில் ரயில் போக்குவரத்து அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே மத்திய ரயில்வே அமைச்சகம் ரயில்வே துறையை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக ரயில் பாதைகளை அதிகப்படுத்தி, அகலப்படுத்தி, இரட்டை வழிப்பாதைகளை ஏற்படுத்தி, ரயில் இணைப்புகளை கூடுதலாக்கி, ரயில்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தி பொது மக்களின் போக்குவரத்தை எளிதாக்கிட வேண்டும்.

மேலும் ரயில்வேயில் பணிபுரியும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய ரயில்வே அமைச்சகம் நிறைவேற்றிட வேண்டும். ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் நீண்ட கால கோரிக்கைகளான ரயில்வேயில் காலியாக உள்ள அனைத்து காலியிடங்களையும் பூர்த்தி செய்திட வேண்டும்.

7–வது ஊதியக் குழுவின் தொழிலாளர் விரோத பரிந்துரைகளை மாற்றி அமைக்க வேண்டும். தேப்ராய் கமிட்டியின் தனியார்மய பரிந்துரைகளை ஏற்கக் கூடாது. பதவி உயர்வு வழங்க வேண்டும். , புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து சமூக பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்த்து காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT