தமிழகம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் 24-ல் தொடக்கம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதத்தை ஓரிக்கையில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறார்.

இது தொடர்பாக சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று வியாச பூர்ணிமா அல்லது குரு பூர்ணிமா அனுசரிக்கப்படும். அப்போது சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடிக்கப்படும்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது சாதுர்மாஸ்ய விரதத்தை, காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பாலாற்றங்கரையில் உள்ள ஸ்ரீமாக சுவாமிகள் மணி மண்டபத்தில் ஜூலை 24-ம் தேதி தொடங்குகிறார். 4 பட்சங்கள் விரதம் இருந்து, செப்டம்பர் 20-ம் தேதி விரதத்தை நிறைவு செய்கிறார். விரத முடிவில் விஸ்வரூப யாத்திரையும் நடைபெற உள்ளது. இந்த விரத நாட்களில் சந்திர மவுளீஸ்வரர் பூஜை, பிக்‌ஷா வந்தனம், பஞ்சாங்க சதஸ் போன்ற கருத்தரங்குகள், வேதங்களின் உரைகளான பாஷ்ய பாடங்கள், நான்கு வேத பாராயணங்களை வேத விற்பன்னர்கள் நிகழ்த்த உள்ளனர். தினமும் மாலையில் சமய சொற்பொழிவுகள், இன்னிசை கச்சேரிகள் நடைபெறும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 29, 30, 31-ம் தேதிகளில் அடுத்த ஆண்டுக்கான பஞ்சாங்கம் வெளியிடுவோரின் கலந்துரையாடல் நடைபெறும். நாடு முழுவதும் வசிக்கும் அக்னிஹோத்ரிகள் 140 பேர் பங்கேற்கும் மாநாடும் நடக்க உள்ளது. இந்த விரத நாட்களில் சன்யாசிகளை வணங்குவது சிறப்பாகும். அரசு வகுத்துள்ள வழிமுறைகளை கடைபிடித்து இந்த நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்துகொள்ளலாம். முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் ஸ்ரீமடத்தின் www.kamakoti.org இணையதளம், யூ-டியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும். பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த நிகழ்வுகளில் பங்கேற்று, தியானம், பிரார்த்தனை, வழிபாடுகளை மேற்கொண்டு, ஸ்ரீஆச்சாரியர்கள் அனுக்ரஹத்துக்கு பாத்திரமாகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT