மேகேதாட்டு அணைக்கு எதிராக பெண்ணாடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமைக்குழு போராட்டத்தினர். 
தமிழகம்

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மேகேதாட்டு அணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்: பெண்ணாடம், புதுச்சேரியில் கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கம்

செய்திப்பிரிவு

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மேகேதாட்டு அணைக்கு கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் புதுச்சேரியில் போராட்டங்கள் நடைபெற்றன. புதுச்சேரியில் போராட்டத்தினர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள் காவிரி உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் டெல்டா மாவட்டங்களில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நேற்று மேகேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டுவதற்கு எதிராக போராட்டஙகளில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.முருகன் தலைமையில் நடைபெற்றது. பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மா. மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் தி. சின்னமணி, மகளிர் ஆயம் அமைப்புக்குழு உறுப்பினர் மு. வித்யா, செயற்குழு உறுப்பினர்கள் க. இந்துமதி, மு. செந்தமிழ்ச்செல்வி, துறையூர் கிளைச் செயலாளர் சி. பிரகாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கர்நாடக அரசின் அணை கட்டும் நடவடிக்கைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணைக் கட்டும் திட்டத்தால், தமிழகத்தின் பாதிப்பு குறித்து எடுத்துரைத்தனர். இந்த அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் எனக் கூறி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீஸார், அதைத் தடுத்தனர். இதனால் போலீஸாருக்கும், காவிரி உரிமை போராட்டக் குழுவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக 44 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடு வித்தனர்.

புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் புதுவை அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி தலைமை தாங்கினார். உலகத்தமிழ் கழக புதுவை தலைவர் தமிழ்மகன், தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதி, தமிழர் களம் தலைவர் அழகர், நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க செயலாளர் ரமேஷ், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் பாவாடைராயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை திடீரென எரித்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களிடம் இருந்து உருவபொம்மையை கைப்பற்றி தீயை அணைத்தனர்.

SCROLL FOR NEXT