தமிழகம்

அரசு ஊழியர் சங்கங்களுடன் முதல்வர் பேச்சு நடத்த வேண்டும்: வீரமணி கோரிக்கை

செய்திப்பிரிவு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர் சங்கங்களுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயக மாண்புக்கு உகந்தது அல்ல.

தமிழக சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் நிலையில் போராடும் அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்த வேண்டும்.

அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும். அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆளும் கட்சியும் கண்டுகொள்வதில்லை. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தால் அதையும் அனுமதிப்பதில்லை. ஆட்சி சக்கரம் திக்குத் தெரியாமல் எங்கோ தடுமாறி ஓடிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது அடையாளம்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி ஒருவர் உடல்நலக் குறைவில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு காது கொடுத்து கேட்க வேண்டும். அதற்கு அவர்களுடன் முதல்வர் பேச்சு நடத்த வேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT