சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் பங்கேற் பின்றி இவ்விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 12 நாட்கள் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா பிரசித்தி பெற்றது. கடந்த ஆண்டு கரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா நேற்று தொடங்கியது. கொடிப்பட்டம் கோயில் உள் பிரகாரத்தை சுற்றி வந்ததும், கோமதி அம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில் காலை 6.20 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரம் தர்ப்பைப்புல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் முக்கிய வைபவமான தபசுக்காட்சி வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.
திருவிழா தொடர்பான சிறப்புப் பூஜைகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் திருவிழா நடைபெறும் வரும் 24-ம் தேதி வரை 12 நாட்களும் காலை 8 மணிக்கு மேல் இரவு 7.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர் கள் கோயிலில் ஆடிச்சுற்று சுற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருவிழா நடைபெறும் நாட்களில் இரவு மண்டகப்படியில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேகம், பூஜைக்கான பொருட்களை மண்டகப்படிதாரர்கள் வழங்கலாம் என்றும், விழாவில் பங்கேற்க அவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மண்டகப் படிதாரர்களின் வேண்டுகோளை ஏற்று விழா நாட்களில் இரவு 7 மணிக்கு மேல் நடைபெறும் சிறப்பு பூஜையில் சம்பந்தப்பட்ட மண்டகப்படிதாரர்கள் 50 பேரை மட்டும் அனுமதிக்க சங்கரன்கோவில் கோட்டாட்சியர் ஹஸ்ரத்பேகம் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வரும் 23-ம் தேதி மாலையிலும், இரவிலும் தபசுக்காட்சி கோயிலுக்குள் நடைபெறும். இந்நிகழ்விலும் மண்டகப்படிதாரர்கள் தவிர பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.
வரும் 23-ம் தேதி மாலையிலும், இரவிலும் தபசுக்காட்சி கோயிலுக்குள் நடைபெறும். இந்நிகழ்விலும் மண்டகப்படிதாரர்கள் தவிர பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.